Print this page

மதிப்புரைகள். குடி அரசு - மதிப்புரை - 14.06.1931 

Rate this item
(0 votes)

 “பகுத்தறிவே விடுதலை - அல்லது ஜீவாத்மா இல்லை" என்னும் இந்தப் புத்தகம் நமது நண்பர் உடுமலைப்பேட்டை உயர்திரு. எம்.எஸ். கனகராஜன் அவர்களால் எழுதப்பட்டு நமது பார்வைக்கு வந்ததைப் பார்த்தோம். 

இப்புத்தகமானது நாம் பார்த்தவரையில் பகுத்தறிவையே பிரதானமாய் வைத்து மிகுந்த மன ஆராய்ச்சி செய்து எழுதிய ஒரு அருமை யான கருத்துக்களடங்கிய புஸ்தகமாகும் என்பது நமது அபிப்பிராயம். இதில் அநேக சொந்தப் புதிய அபிப்பிராயங்களும், யாவரும் ஆச்சரியப்படும் படியாகவும், எவரும் எளிதில் உணர்ந்து கொள்ளும்படியாகவும் பல மேற்கோள்களுடன் எழுதப்பட்டிருக்கின்றது. பொதுவாகவே மக்களுடைய மூட நம்பிக்கைக்கு முக்கிய ஆதாரமாய் இருந்துவரும் ஜீவாத்மா, மதம், கர்மம். முன்பின் ஜன்மம் ஆகியவைகளைப் பற்றியும் மற்றும் கடவுள் வணக்கம், விக்கிரக ஆராதனை, பிரார்த்தனை அவைகளுடையவும், மற்றும் மத சம்பந்தமானதுமான சடங்குகள், இவைகளுக்காகச் செய்யப்படும் செலவுகள் முதலியவைகளைப் பற்றியும் தக்க ஆதாரங்களுடன் கண்டித்து எழுதப் பட்டிருக்கின்றது. மேலும் இவை மாத்திரமல்லாமல் மக்களுக்குள் பிறவி, ஜாதி வித்தியாசம். வருணாசிரமதர்மம் முதலிய விஷயங்களும் கண்டிக்கப்பட்டிருப்பதுடன் இவைகள் உண்டாக்கப்பட்டதின் உள் எண்ணங் கள் முதலியவைகளையும் விளக்கிக் காட்டப்பட்டிருக்கின்றது. 

இந்தப்படி காட்டப்பட்ட இவற்றிற்கெல்லாம் ஆதாரமாகச் சித்தர் கள்” வாக்கியங்கள் முதலிய பல மேற்கோள்களைக் குறிப்பிட்டிருப்பதுடன், விளக்கச் சித்திரங்களையும் யாவரும் உணரும்படியாக வரையப்பட்டி ருக்கின்றன. பொதுவாகக் கூறுமிடத்து இந்தியாவின் இன்றைய அரசியல், சமூக இயல், அறிவு இயல் முதலாகியவைகளின் நிலைமைக்கு முக்கிய காரணம் மதம் என்பதைக் குறிப்பிட்டு சிறப்பாகத் தீண்டாமையும், பெண் அடிமையுமே முக்கிய காரணம் என்பதையும் சொல்லிக்காட்டி இவைகள் எல்லாம் ஒழிந்தால் அல்லது இந்தியா விடுதலையை அடைய முடியாது என்பதையும் தெளிவு படுத்தப்பட்டிருக்கின்றது என்று சொல்லுவோம். 

இப்புத்தகத்தை வாசித்துப் பார்த்தவர்கள் ஒவ்வொருவரும் இதிலி ருந்து அநேக அரிய கருத்துக்களையும், புதிய எண்ணங்களையும் அடைந்தே தீருவார்கள். ஆகவே இவ்வரிய வேலையை மேற்கொண்டு உண்மைத் தொண்டாற்றிய உயர்திரு. எம்.எஸ். கனகராஜன் அவர்களுக்குப் பகுத்தறிவு பெற்றுத் தீர வேண்டிய இந்திய மக்கள் சார்பாக நமது நன்றியறிதல் உரித்தாகுவதாக. (இப்புத்தகம் குடி அரசு புத்தகாலயத்திலும் கிடைக்கும் 

குடி அரசு - மதிப்புரை - 14.06.1931

Read 61 times